Friday, July 9, 2010

ஸ்வாமி விவேகானந்தர்

வாரனாசியிலுள்ள மகாதேவரின் அருளால் கொல்கத்தாவிலுள்ள விஸ்வநாத் -விஸ்வேஷ்வரி தம்பதியருக்கு 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதியன்று நரேந்திரதத் என்ற பாலகன் பிறந்தார் . கல்வி, கலை , பக்தி ஆகியவற்றில் திறமையைப் பெற்ற நரேந்திரதத் படிக்கும்போது பல கேள்விகளை எழுப்பி ஆசிரியரை விந்தையில் ஆழ்த்தினார் . நரேந்திரதத் சட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார் . நரேந்திரதத் "இறைவனை பார்த்ததுண்டா ?" என்ற கேள்வியை பரமஹம்சரிடம் கேட்டார் . நரேந்திரதத் கண்களில் தெரிந்த தேஜஸானஒளியை அறிந்து கொண்ட பரமஹம்சர் அவரை தன்னுடைய சிஷ்யராக்கிக் கொண்டார் . அவரிடமிருந்து ஆன்மீக சன்மார்க்கத்தைக் கற்றுக் கொண்டார் .
செல்வம் , பெண் , பதவி ஆகியவற்றில் ஏங்குபவன் சாதாரண மனிதனாவான் . ஆனால் எவனொருவன் இறைவனுக்காக ஏங்குகிறானோ அவன் எதிரே இறைவன் தோன்றுகிறார் என்று நரேந்திரதத் கேட்ட கேள்விக்கு சற்றுகூட சலமில்லாமல் பரமஹம்சர் பதில் கொடுத்தார் . நரேந்திரனுக்கு ராம மந்திர திக்ஷதையை அளித்த பரமஹம்சரின் ஆத்மா அவருடைய உடலைவிட்டு பிரிந்து ஒளிவடிவமாக நரேந்திரதத்தின் ஆத்மாவோடு கலந்தது . அன்றிலிருந்து அவர் ஸ்வாமி விவேகானந்தா என்ற பெயரால் உலகத்திற்கு அறிமுகமானார் . உலகப் பயணத்தை மேற்கொண்ட ஸ்வாமி விவேகானந்தர் பேச்சுத் திறமையால் இந்து மதத்தின் மகிமையை எடுத்துரைத்தார் . உலக மக்களோடு ஞானம், பக்தி ஆகிய இருமார்க்கத்தின் பெருமையையும் , அருமையையும் பகிர்ந்து கொண்டார் . சர்க்கரை நோய்க்கு ஆளாகிய ஸ்வாமி விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு பிப்வரி மாதத்தில்
மகாசமாதி பெற்றார் .

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்


மகாவிஷ்ணு , சிவபெருமான் ஆகிய இருவரின் அருளால் 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் திகதியன்று மேற்கு வங்காளத்தில் உள்ள குமார்பூர் என்ற கிராமத்தில் குடிராம் - சந்திராமணி என்ற தம்பதியருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மகனாக பிறந்தார் . குழந்தைப் பருவத்தில் அவர் கதாதர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . கதாதர் தக் ஷினேஸ்வரில் தஞ்சமடைந்த போது ராமகிருஷ்ணர் என்ற பெயரைப் பெற்றார் .

படிப்பில் நாட்டமில்லாத ராமகிருஷ்ணர் பஜனைகள் , புராணக் கதைகள் , ஓவியம் ஆகியவற்றில் ஆர்வத்தைக் காட்டினார் . ஆறாவது வயதில் கருமேகங்களுக்கிடையே சிவபெருமான் அவருடைய கண்களுக்கு காட்சி கொடுத்ததால் அன்றிலிருந்து இறைவனை நேரில் காணவேண்டுமென்ற ஆர்வத்தால் கடுந்தவம் செய்தார் .

1843 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணர் தந்தையை இழந்து மூத்த சகோதரனுடன் தக் ஷினேஸ்வரில் தஞ்சம் அடைந்தார் . அங்குள்ள பிரபலமான காளி கோயிலின் பொறுப்பை மகாராணி ரசமணி ராமகிருஷ்ணரின் மூத்த சகோதரனிடம் ஒப்படைத்தார் . ராமகிருஷ்ணரும் சகோதரனுடன் இணைந்து உதவி செய்தார் . ஒருநாள் அந்தக் கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலையை வேறிடத்தில் வைப்பதற்கு தூக்கி எடுக்கும்போது கைதவறி விழுந்ததால் சிலையின் கால்கள் தனியாக பிரிந்தன . ராமகிருஷ்ணர் உடைந்த கால்களை சிலையோடு ஓட்ட வைத்து, அதே சிலையை மீண்டும் சன்னிதியில் வைத்து தானும் பூஜித்து , மக்களையும் பூஜிக்க வைத்தார் .

சில காலங்களுக்கு பிறகு அவருடைய மூத்த சகோதரனும் உயிர் நீத்தார் . அதன் பிறகு கோயில் பொறுப்புகளை மகாராணியின் மருமகன் ராமகிருஷ்ணரிடம் ஒப்படைத்தார் . காளிதேவியை நேரில் காணவேண்டுமென்று எண்ணம் கொண்ட துடிப்பில் ராமகிருஷ்ணர் ஆறு வருட காலமாக தன்னைப் பற்றி சிந்திக்காமல் எப்போதும் காளிதேவியையே ஸ்மரணம் செய்து கொண்டிருந்தார் . ஒருநாள் கோபம் கொண்டு ராமகிருஷ்ணர் தன்னுடைய உயிரை நீத்துக் கொள்வதற்கு முயற்சித்த போது காளிதேவி அவர் எதிரே தோன்றினாள். அவருடைய பக்தியில் பரவசமடைந்து தேவி அருள் கொடுத்து மறைந்தாள். 23 ஆம் வயதில் ராமகிருஷ்ணருக்கு ஸ்ரத்தாமணி என்பவருடன் திருமணம் நடை பெற்றது. திருமணத்திற்கு பிறகும் ராமகிருஷ்ணர் பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிரமடைந்தார் .

பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் சேர்ந்த ராமகிருஷ்ணர் குண்டலினி , அஷ்டசித்தி , தாந்திரகம் ஆகியவற்றை கற்றுக் கொண்டார் . வைணவம் , சைவம் ஆகிய இரு சம்பிரதாயங்களிலும் தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்ண பரமஹம்சர் தனக்குள்ளிருக்கும் பரமாத்மாவை கண்டு மகிழ்ந்தார் . அனுமன் முதன் முறையாக சீதாவை கண்ட அனுபவத்தை ராமகிருஷ்ணர் உணர்ந்தார் . தனக்குள் இருக்கும் பரமாத்மாவே இறைவன் என்ற உண்மையை அறிந்து கொண்ட ராமகிருஷ்ணர் இந்த அற்புதமான அனுபவத்தை மக்களோடு பகிந்து கொண்டார் . தன்னுடைய சிஷ்யனான நரேந்திரதத் என்பவருக்கு தன்னிடமிருக்கும் சக்தியை ஒப்படைத்து விட்டு 1886 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் திகதியன்று ஒளிவடிவமாக நரேந்திர ஆன்மாவோடு கலந்தார் . அன்றிலிருந்து நரேந்திரதத் என்ற இளைஞர் விவேகானந்தர் என்ற பெயரால் உலகத்திற்கு அறிமுகமானார் . பரமஹம்சர் புகழ்பெற்ற ராமகிருஷ்ண உபநிஷதங்கள் என்ற நூலை இயற்றிய பெருமையைப் பெற்றார் .

Wednesday, July 7, 2010

மகரிஷி தயானந்த சரஸ்வதி


இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் இறைவனைக் காணலாம் என்ற தத்துவத்தை உணர்த்திய மகரிஷி தயானந்த சரஸ்வதி, 1824 ஆம் ஆண்டில் சௌராஷ்டிரா மாநிலத்திலுள்ள டன்காரா என்ற கிராமத்தில் கர்சன் -தார்வாடி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . பெற்றோர்கள் அவரை மூலசங்கரர் என்ற பெயரால் அழைத்தார் .

பிராமணக் குடும்பத்தைச் சார்ந்த மூலசங்கரரின் தந்தை பரம சிவபக்தி கொண்டவர் . குழந்தைப் பருவத்தை அதிகபட்சமாக இல்லத்தில் கழித்த மூலசங்கரருக்கு 21 ஆம் வயதில் திருமணம் நிச்சியக்கப்பட்டது . ஆனால் குடும்ப வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிய மூலசங்கரர் திருமணம் அன்று வீட்டை விட்டு வெளியேறினார் . தன்னுடைய இரண்டாவது வாழ்க்கைக் காலகட்டத்தில், ஸ்வாமி நாராயண பிரம்மச்சாரி என்பவரால் நடத்தி வந்த ஆசிரமத்தில் சிஷ்யனாக சேர்ந்தார் . அங்கு புரானந்த சரஸ்வதி என்ற குருவிடம் வாழ்க்கையின் யதார்த்தத்தை கற்றுக் கொண்டார் . அதிவேகமாக கிரகித்துக் கொள்ளும் திறனைப் பெற்ற மூலசங்கரரின் இந்த ஆற்றலை அறிந்து கொண்ட அவருடைய குரு அன்றிலிருந்து ஆசிரமத்தில் அவரை தயானந்த் சரஸ்வதி என்ற பெயரால் அழைத்தார் .

ஸ்வாமி விராஜ்நந்த குருவிடம் வேதங்களைக் கற்றுக் கொண்ட மகரிஷி தயாநந்த சரஸ்வதி காசிக்குச் சென்று வேதாங்கம் கல்வியிலும் தேர்ச்சி பெற்றார். சமஸ்கிருதம் , ஹிந்தி , குஜராத்தி மொழிகளில் பேச்சுத் திறனைப் பெற்ற மகரிஷி தான் பெற்ற பக்தி மார்க்கத்தை மக்களோடு பகிர்ந்து கொண்டார் . தன்னுடைய வாழ்க்கையின் மூன்றாவது காலகட்டத்தில், அவர் கற்றுக் கொண்ட கல்வியையும், ஞானத்தையும் போதிக்கத் தொடங்கினார் . அந்தச் சமயத்தில் மக்களுடைய பொதுநலனை மனதில் வைத்துக் கொண்டு ஆரிய சமாஜதத்தைத் துவக்கினார் .

முற்போக்கான எண்ணங்களைக் கொண்ட மகரிஷி தயானந்த் சரஸ்வதி, ஜோத்பூர் அரசரால் பல இன்னல்களைச் சந்தித்தார் . ஆனால் இடையூறுகளை சமாளித்தவண்ணம் மகரிஷி மனோதிடத்துடன் தன்னுடைய எண்ணங்களைப் பரப்புவதில் செயல்பட்டார் . 1883ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதியன்று மகரிஷி தயானந்த் சரஸ்வதி காயத்ரி மந்திரத்தை ஜபித்த வண்ணம் சமாதி பெற்றார் . மகரிஷி வேதபாஷ்யா , பாஷ்ய பூமிகா , சத்யார்த்த பிரகாஷ் ஆகிய நூல்களை இயற்றிய பெருமையைப் பெற்றார் .

மீராபாய்

ராஜ பரம்பரையில் பிறந்த மீரா தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தாயை இழந்தாள். அதன் பிறகு தாத்தாவின் அரவணைப்பில் மீரா வளர்ந்தாள். சின்னப் பருவத்தில் தாத்தா அவளுக்கு கிருஷ்ணரின் புகழ் பாட்டை ஊட்டி வளர்த்ததால், அவள் கிருஷ்ண பரமாத்மாவை அதிகமாக நேசிக்கத் தொடங்கினாள். சித்தூரை ஆண்ட மகாராஜா போஜ்ராஜ் என்பவருக்கு மீராவை கட்டிக் கொடுத்தார் . தன்னுடைய கணவரை விட அதிகமாக நேசித்த கிருஷ்ண பரமாத்மாவை மீரா கணவராகப் பாவிக்கத் தொடங்கினாள். ஆறு வருடங்கள் கழித்து அவளுடைய கணவர் மரணமடைந்தார் . அதன் பிறகு அவருடைய சகோதரன் விக்கிரமாதித்யன் சித்தூரை ஆண்டான் . ராஜ பரம்பரையைச் சேர்ந்த மீரா சாதுக்களுடன் பகவான் நாமத்தை பாடி , ஆடிக் கொண்டிருப்பதை விரும்பாத விக்கிரமாதித்யன், அவளைத் தீர்த்துக்கட்ட பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்து, அதனை கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்த சரணாம்ருதம் என்று பொய் சொல்லிக் கொடுத்தான் . மீரா அந்தப் பாலை அருந்தும் போது அதனுள்ளே இருந்த விஷம் அமிர்தமாக மாறி அவளை ஒன்றும் செய்யாமலிருந்தது .

இன்னொரு முறை நல்ல பாம்பை வைத்துள்ள கூடையில் பூமாலையும், சாளக்கிராமமும் இருப்பதாகச் சொல்லி அவளுடைய அறையில் வைத்தான் . மீரா குளித்துவிட்டு அந்தக் கூடையை திறந்து பார்த்தபோது உண்மையாகவே அந்தக் கூடையில் ஒரு பூமாலையும் , சாளக்கிராமமும் இருந்தன . இத்தகைய தொல்லைகளைக் கொடுத்த விகிரமாதித்யனை விட்டு மீரா பிறந்த வீட்டிற்குச் சென்றார் . பிறகு மீரா பிருந்தாவனம் சென்றார் . அங்கு மீராஜீவ்கோஸ்வாமியை சந்தித்தார் . அங்கிருந்து த்வாரகை சென்றார் . மீரா கிருஷ்ணரை புகழ்ந்து பல பாடல்களைப் பாடினார் . அப்படி பாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மீரா துவாரகையில் உள்ள கிருஷ்ணனோடு கலந்தாள். கிருஷ்ணரையே கணவராக எண்ணிய மீராவின் வாழ்க்கைச் சரித்திரம் என்றும் நம்முடைய மனத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது என்று சொல்லலாம் .

துளசிதாசர்

1554ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராஜாபூர் என்ற இடத்தில் ஒரு பிராமணர் தம்பதியருக்கு இவர் பிறந்தார் . அவர் பிறந்தவுடனேயே அவருடைய அன்னை இறந்தார் . தன்னுடைய மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் அவருடைய தந்தையும் துளசிதாசரை கைவிட்டுச் சென்றார் . அதன் பிறகு அவருடைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரி துளசிதாசரை எடுத்து வளர்த்தாள். அவளுடைய உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் துளசிதாசரின் ஐந்தாவது வயதில் வேலைக்காரியும் மரணமடைந்தாள். அதன் பிறகு நர்ஹரிநந்தாஜி என்ற வியாபாரி துளசிதாசரை எடுத்து வளர்த்து படிக்க வைத்தார் . துளசிதாசர் ஸ்வாமி ராமானந் ஆஸ்ரமத்தில் வேதங்கள் , புராணங்கள் , சாஸ்திரங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். தீனபந்து பாதக் என்பவரின் மகள் ரத்னாவளியை மணந்து கொண்டார் . துளசிதாசர் தன்னுடைய மனைவி மீது அதிகமான அன்பும் மோகமும் வைத்திருந்தார் . ஒருநாள்கூட மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாமல் துளசிதாசர் அவள்மீது அப்படிப்பட்ட அன்பைப் பொழிந்தார் .

திடீரென்று ஒருநாள் ரத்னாவளி அவள் பிறந்த வீட்டிற்கு சென்றாள். மனைவியின் பிரிவைத் தாளமுடியாத துளசிதாசர் அவளுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கு துளசிதாசரைக் கண்டு கோபம் கொண்ட ரத்னாவளி, " இப்படி தன்னுடைய சதைப் பிண்டத்தின் மீது மோகம் கொள்வதற்கு பதிலாக பகவான் ஸ்ரீராமர் மீது மோகம் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்த மாதிரி நிலையிலிருந்து விடுபட்டிருப்பாய்" என்று சொன்ன வார்த்தைகள் துளசிதாசரை ஆழமாக பாதித்து அவருடைய மனக்கண்களை திறந்து வைத்தது . அன்றிலிருந்து அவர் பகவான் நாமத்தை புகழ்ந்து பல நூல்களை இயற்றினார். ராமசரித்மானஸ் , வைராக்ய சாந்தி பானி , பார்வதி மங்களம் , கவிதாவளி , கீதாவளி , ஹனுமான் பஹூக் போன்ற பிரசித்தி பெற்ற நூல்களை இயற்றி இருக்கிறார் .

Tuesday, July 6, 2010

சைதன்ய மகாபிரபு

1486 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் உள்ள நவதீப் என்ற இடத்தில் சைதன்ய மகாபிரபு பிறந்தார் . ஆன்மீகவாதியான ஜகன்நாத் மிஸ்ரா - சாக் ஷி தேவிக்கு மகனாக பிறந்தார் . சைதன்யாவின் முதல் சகோதரர் விஸ்வரூப் சன்யாசம் வாங்கிக் கொண்டார் . சைதன்ய மகாபிரபு குழந்தைப் பருவத்தில் விச்வாம்பர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . அவரை மக்கள் செல்லமாக நிமாய் என்றும் அழைத்தார்கள் .

குழந்தைப் பருவத்தில் அவர் படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்தார். அவர் 12 வது வயதில் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றார் . அப்போது தான் அவருடைய தந்தை மரணம் அடை ந்தார். அதன் பிறகு அவர் பண்டித் வல்லபாசாராவிடம் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக் கொண்டார் . அந்தச் சமயத்தில் தன்னுடைய குருவின் மகளான லக்ஷ்மியை மணந்து கொண்டார் . சைதன்ய மகாபிரபு தன்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு சம்ஸ்கிருத பாடசாலையைத் தொடங்கினார் . அந்தப் பாடசாலை நாளடைவில் வளர்ச்சி பெற்றதால் சைதன்யா அந்தப் பாடசாலை மீது முழு கவனத்தை செலுத்தினார் . குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளாததால் அவருடைய மனைவி லக்ஷ்மி திடீரென்று மரணமடைந்தார் .

தன்னுடைய அன்னையின் வற்புறுத்தலால் மீண்டும் சைதன்யா விஷ்ணுப்ரியா என்பவரை மணந்து கொண்டார் . ஒரு சமயம் சைதன்யா காயா சென்ற போது மாபெரும் தபஸ்வியை சந்தித்தார். அவரிடமிருந்து மந்திரங்களைக் கற்று கொண்டார் . இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது சைதன்யாவிடம் மாற்றங்கள் தோன்றின . அவர் நீண்ட நேரம் தியானம் செய்யத் தொடங்கினார் .

சைதன்யா அனுதினமும் கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து , அவர்மீது மோகம் கொண்டு பக்தி கானங்கள் பாடினார் . 1510 ஆம் ஆண்டில் சைதன்யா சந்நியாசம் எடுத்துக் கொண்டார் . பதினெட்டு வருடங்களுக்கு சைதன்யா ஜகன்நாத்பூரியில் தஞ்சமடைந்தார் . ஒரு நாள் ஜகன்நாதர் சின்ன மூர்த்தியை அரவணைத்துக் கொண்டிருந்த போது அவருடைய ஆத்மா பிரிந்து , அந்தச் சின்ன மூர்த்தியோடு கலந்தது . ராதா - கிருஷ்ண மீது பல பாடல்களை இயற்றிய சைதன்ய மகாபிரபு என்றும் நம்முடைய நினைவில் இருந்துகொண்டே இருக்கிறார் .

குருநானக்

காலுவேதி - த்ருப்தாஜி தம்பதியருக்கு கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியன்று தல்வந்தி கிராமத்தில் குருநானக் பிறந்தார் . குழந்தைப் பருவத்திலே குருநானக் அதிக நேரம் தியானத்தில் மூழ்கினார் . அந்தச் சின்ன வயதிலேயே குருநானக் பஜனைகளை நிகழ்த்தினார். ஏழை , எளியவர்களுக்கு தன்னிடமிருந்ததை கொடுத்து உதவினார் . கிராமத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவர் வேதங்களிலும் , புராணங்களிலும் ஆர்வத்தைக் காட்டினார் . பண்டித் பிரிஜ்நாத் என்பவரின் மூலம் வேத சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டார். அந்தச் சின்ன வயதிலே மக்களின் நலத்தில் ஆர்வம் காட்டிய குருநானக் தனக்காக எதையும் யோசிக்காமல் மக்களுக்காகவே உழைத்தார் . குருநானக் மூல்சந்த் என்பவரின் மகளான சுலாகினியை மணந்து கொண்டார் .
ஒரு சமயம் குருநானக் "வை " என்ற நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென்று புதிய அனுபவம் அவருக்குள்ளே ஏற்பட்டது . அன்றிலிருந்து மூன்று நாட்கள் அவர் காணாமல் போனார் . அதன் பிறகு தோன்றிய போது அவருடைய முகத்தில் திவ்ய ஒளி ஒன்று தென்பட்டது . அவருக்குள்ளே ஒருவித ஆன்மீக சக்தியொன்று பிறந்தது . குருநானக் எந்நேரமும் பகவானின் நாமத்தை அதாவது நாமஸ்மரன் உச்சரித்து கொண்டிருந்தார் . குருநானக் இந்த நாமஸ்மரனை மக்களிடம் பரப்பினார் . குருநானக் முப்பது வயதில் பல இடங்களுக்குப் பயணம் செய்தார் . மக்களுடைய மூடநம்பிக்கையை அகற்றி குருநானக் அவர்களுக்கு நல்ல விஷயங்களைப் போதித்தார் . ஜாதி , மத பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயன்றார் . 1539 ஆம் ஆண்டில் குருநானக் ஆத்மா ஸ்வரூபமாக தன்னுடைய வேலைக்காரன் உடலுக்குள் ஐக்கியமானார். அவனுடைய உடலில் இருந்து ஓர் ஒளியாக மாறி வானத்தில் மறைந்தார் . குருநானக் மறையும் தருணத்தில் ஓம் சத்யஸ்ரீ அகால் என்ற புனித நூலை சொல்லிக் கொண்டே மறைந்தார் . சீக்கியர்களின் மத குருவான குருநானக் "குரு கிரந்த் சாஹிப் " என்ற நூலை இயற்றினார். இன்றும் சீக்கியர்கள் இந்த கிரந்தத்தை கடவுளாக எண்ணி வணங்குகிறார்கள் .